Sunday, January 26, 2014

[omkarakudil:149] அவதார வள்ளலார்

அவதார வள்ளலார்

17ஜன

vallalaar

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்ற மகா மந்திரத்தை உலகம் உய்ய அருளிய மாண்பாளர் ஒளியோடு ஒளியாக, இறைவனுடன் இரண்டின்றி ஒன்றாகக் கலந்த தினம். கருவிலே திருவுடையவராய்த் தோன்றிய இந்த மகாபுருஷர் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக ஆக்கிக் கொண்டு இறைவனோடு இரண்டறக் கலந்த மாபெரும் அவதார புருடர்.

சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப் பிள்ளை – சின்னம்மை தம்பதியினருக்கு 5-10-1823ல் மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ ராமலிங்க அடிகள். தந்தை இளம் வயதில் இறந்ததால் சகோதரர் சபாபதிப் பிள்ளையின் ஆதரவில் சென்னையில் வந்து வசித்தார். இளமையிலேயே கருவிலே திருவுடையவராக விளங்கிய குழந்தை வளர வளர தெய்வக் குழந்தையாக பரிணமித்தது. தெய்வத்தின் அருள் பெற்றதாக வளர்ந்தது. பள்ளி செல்லும் வருவத்திலேயே அவருக்கு ஞானம் முகிழ்த்தது. ஓதாது அனைத்தையும் உணர்ந்து கொண்ட மெய்ஞ் ஞானக் குழந்தையாய் வளர்ந்தது.

வள்ளலார்

வள்ளலார்

இளம் வயதில் ஆசிரியர் 'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் செல்ல வேண்டாம்' என உலக நீதிப் பாடலைப் பாட, அதைக் கேட்ட சிறுவன் இராமலிங்கம், அங்ஙனம் எதிர்மறையாக எண்ணங்களை பிஞ்சு எண்ணங்களில் பதியச் செய்வது தவறு என்று கூறிப் பாடிய பாடல் அவர் ஒரு ஞானக் குழந்தை என்பதை உலகுக்கு அறிவித்தது.

  ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
  பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
  பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
  மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
  மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
   நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
  தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
   தலமோங்கு கந்த வேளே
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
   சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

என்ற பாடலை ஆசிரியர் மெச்சினாலும், ராமலிங்கர் படிப்பில் ஆர்வம் இல்லாது இருப்பதும், அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருப்பதையும் கண்டு அண்ணன் சபாபதிப் பிள்ளையிடம் முறையிட்டார். அண்ணன் தம்பியைக் கண்டித்தார். வீட்டில் இருந்தே படிக்க ஏற்பாடு செய்தார். மாடியறையில் தனியிடம் ஒதுக்கிக் கொடுத்தார்.

அவ்வறையில் தினம்தோறும் படிப்பதற்குப் பதிலாக தியானம் எய்து கொண்டிருந்த ராமலிங்கருக்கு ஒருநாள் முருகனின் அருட்காட்சி கிடைத்தது.

"சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!"

- என்று அந்நிகழ்வைப் பாடினார்.

அண்ணன் தம்பியை ஒரு சாதாரணக் குழந்தையாகவே எண்ணியிருந்தார். ஆனால் ஒரு சொற்பொழிவுக்கு தமக்குப் பதிலாக அவர் செல்ல நேர்ந்ததையும், அது கேட்டு மக்கள் புகழ்வதையும் எண்ணி தம்பியின் திறம் கண்டு மகிழ்ந்தார். ஒருநாள் ராமலிங்கரின் சொற்பொழிவையும் அவர் கேட்க நேர்ந்தது. அவர் தெய்வக் குழந்தை என்பதையும், ஒரு அவதார புருடர் என்பதையும் உணர்ந்து கொண்டார். வள்ளலை வாயாரப் போற்றினார்.

வள்ளலாரின் வாழ்க்கையில் இறையருளால் பல்வேறு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. ஒருநாள் பசித்திருந்த போழ்து அன்னை வடிவாம்பிகையே அவருக்கு அக்காள் உருவத்தில் வந்து அமுதூட்டினார்.

சத்ய ஞான சபை

சத்ய ஞான சபை

சென்னையின் பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். இறைவனின் மீது 'திருவருட்பா' என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சமரச சன்மார்க்கச் சங்கத்தையும், சத்தியத் தருமச் சாலையையும் நிறுவினார்.

"வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
 மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
 இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ?"

என்றெல்லாம் ஏழைகளின் நிலை கண்டு இரங்கினார். எல்லா மக்களையும் சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து உய்யுமாறு அழைத்தார்.

சித்தி வளாக மாளிகை

சித்தி வளாக மாளிகை

தாம் உருவாக்கிய சித்தி வளாகத் திருமாளிகையில் பல்வேறு அற்புதங்களைப் புரிந்தார்.

ஒரு நாள்…  மறுநாள் சமைப்பதற்கான அரிசி முதலிய பொருட்கள் இல்லாமல் போய் விட்டன. வரும் அதிதிகளுக்கு எங்ஙனம் பசியாற்றுவது என பணியாளர்கள் அஞ்சினர். பின்னர் தயக்கத்துடன்  அடிகளாரிடம் தகவல் தெரிவித்தனர். அதனைக் கேட்ட  அடிகளார் தனியறைக்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்தார். பின் சிறிது நேரம் சென்று திரும்பி வந்தவர், பணியாளர்களை நோக்கி "கவலை வேண்டாம். தேவையான பொருட்கள் அனைத்தும் நாளையே வந்து சேரும்" என்று கூறினார்.

பணியாளர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. "எப்படி வரும், எங்கிருந்து வரும், யார் மூலம் வரும்?" என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

வள்ளலார் மறைந்த அறை

வள்ளலார் மறைந்த அறை

 மறு நாள் பொழுது புலர்ந்து, பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த பொழுது  மூன்று வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அதில் முழுவதும் மூட்டை மூட்டையாய் அரிசிகள், இன்ன பிற உணவுச் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பணியாளர்கள் ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்தவரிடம் கேட்ட பொழுது, அவர், தான் பக்கத்தில் உள்ள திருத்துறையூரில் இருந்து வருதாகவும்,  முந்தைய நாள், அடிகளார் தன் கனவில் வந்து அரிசி முதலிய உணவுப் பொருட்கள் வேண்டுமென்று கேட்டதாகவும், அவ்வாறே அவர் கனவில் இட்ட கட்டளைப்படியே தான் அங்கு அந்தப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பதாகவும் பணிவுடன் தெரிவித்தார்.

அடிகளாரின் அற்புத ஆற்றலை எண்ணி ஆச்சரியப்பட்டனர் பணியாளர்கள்.

ஜோதி தரிசனம்

ஜோதி தரிசனம்

ஒருமுறை சில பக்தர்கள் ஒரு  புகைப்படக்காரரை சென்னையிலிருந்து  அழைத்துவந்தனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது வள்ளலாரைப் புகைப்படம் பிடித்து, அதனைத் தாங்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதே. வள்ளலார் இதற்கு உடன்படாத பொழுதும் அவர்கள் தங்கள் முயற்சியில் தளராது,  அவரைப் பல முறை படம் பிடித்தனர். ஆனால் அந்தப் புகைப்படத்தில் வள்ளலாரின் வெண்மையான ஆடை மட்டுமே விழுந்திருந்தது. வள்ளலாரின் உருவம் விழவில்லை. பல முறை முயற்சி செய்தும் இதே நிலை தான். இறுதியில் அன்பர்கள் வள்ளலாரைப் புகைப்படம் எடுக்கும் முயற்சியைக் கைவிட்டனர்.  அந்த அளவிற்கு ஒளியுடல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்.

இவ்வாறு உலக உயிர்களுக்காக இரங்கி, வாடிய பயிர்களுக்காக வாடி தன்னலம் கருதாது தொண்டு புரிந்து வந்தார் அடிகளார். ஆனால் மக்கள் யாரும் இவர் தம் பெருமையை முழுமையாக உணரவில்லை. அவர் தம் கொள்கைகளையும் சரியாகப் பின்பற்றவில்லை. அது கண்டு வள்ளலார் வருந்தினார். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டி விட்டோம்' என்று அந்த வருத்தம் வாக்காக வெளிப்பட்டது.

ஸ்ரீ முக ஆண்டு. (1874) தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை. ஜனவரி மாதம் முப்பதாம் தேதி. இரவு மணி பனிரெண்டு. வள்ளலார் அன்பர்களை அழைத்தார்.  "நான் உள்ளே பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்" என்று  அறிவித்தார். பின்…

" பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்
இச்சையெலாம் எய்த விசைத்தருளிச் செய்தனையே
அச்சமெலாந் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!"

- என்று பாடிக்கொண்டே, சித்தி வளாகத் திருமாளிகைக்குள் நுழைந்தார். கதவைச் சாத்திக் கொண்டார். அதன் பின் அன்பர்கள் அனைவரும் அடிகளாரின் உத்தரவுப்படி அறைக் கதவைச் சில நாட்கள் திறக்காமலே இருந்தனர்.  பின் அரசாங்கத்தின் உத்தரவுப்படி  மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், காவல் துறைத் தலைவர் ஆகியோர் பூட்டியிருந்த கதவைத் திறக்க ஏற்பாடு செய்தனர். உள்ளே வெறும் வெற்றிடம் மட்டுமே இருந்தது. வள்ளலாரைக் காணவில்லை. பூட்டிய கதவு பூட்டிய படி இருக்க வள்ளலார் மாயமாக மறைந்து விட்டார்.

வள்ளலார் தமது உடலை 'ஞான தேகம்' ஆக்கிக் கொண்டு காற்றோடு காற்றாய், இயற்கையோடு இயற்கையாய்க் கலந்து விட்டார். தன் உடலை ஒளியுடல் ஆக்கிக் கொண்டு, எல்லாம் வல்ல பேரருள் ஒளியொடு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு, ஒன்றோடு, ஒன்றாகக் கலந்து விட்டார்.

வள்ளலார் மறைந்திருக்கலாம். ஆனால் அவரது சமரச சன்மார்க்க, சமத்துவ, சமுதாயக் கொள்கைகள் மறைந்துவிடவில்லை. அவை இன்னமும் தனது கருத்தினை, சீர்திருத்தக் கொள்கைகளை இந்த உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

எளியோரை வாழ்விக்க வந்த வள்ளலின் பாதம் பணிவோம். வளம் பல பெறுவோம்.




Regards                                      

Vijayakumar
Mobile : 96 7711 5690

--
Parent Homepage : www.agathiar.org
---
You received this message because you are subscribed to the Google Groups "omkarakudil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to omkarakudil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to omkarakudil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/omkarakudil.

No comments:

Post a Comment