Saturday, November 14, 2015

[omkarakudil:196] Fwd: [Agathiyam (அகத்தியம் )] கோபக்காரர்களை வெல்வது எப்படி?


வட கேரளத்தில் காஞ்சன்காடு என்ற இடத்தில் ஆனந்தாஸ்ரமம் உள்ளது. அங்கு நடந்த ஒரு சமபவத்தை சுவாமி ராமதாஸ் சுவைபட வருணிக்கிறார் (தமிழில் மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்).

ஆனந்தாஸ்ரமம் எல்லா வகை சாமியார்களுக்கும் புகலிடம் கொடுத்து வந்தது. அங்கு தங்கும் சிலர், "என்னைத் தொடாதே, என் மீது படாதே; தீட்டு வந்துவிடும். சுத்தம் கெட்டுவிடும்" -- என்றெல்லாம் அங்கலாய்ப்பர்.

ஒரு முறை காவியுடை தரித்த கட்டையான, குட்டையான ஒரு சாமியார் வந்தார். சடை முடியும், தாடியும் உண்டு. முகத்தில் கோபக்கனல் வீசிக்கொண்டே இருக்கும். துர்வாச முனிவரின் மறு அவதாரம்தான். "நான் யார் தொட்டதையும் சாப்பிட மாட்டேன் ஆகையால் எனக்கு சமையல் வசதிகள் வேண்டும்" என்றார். அவரது அறையிலேயே புதிய பாத்திரங்கள், அரிசி, உப்பு, புளி முதலிய பலசரக்குகள் எல்லாம் வழங்கப்பட்டன. அவரே சமைத்து அவரே பரிமாறிக்கொண்டு சாப்பிட்டு விடுவார். அருகிலேயே ஆஸ்ரமம் பயன்படுத்தும் ஒரு வாளியில் பாதி  தண்ணீரும் நிரப்பி வைத்துக் கொண்டு வாழை இலைக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிடுவது அவரது வழக்கம்.

ஒரு நாள், அந்த சாமியார் சாப்பிட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வாளித் தண்ணீரை அருகில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். அந்த வாளி, ஆஸ்ரமத்தில் வரும் வேலைக்காரி வழக்கமாக, பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தும் வாளி. ஆகையால், சாமியாரது அனுமதியின்றி அவர் அதைப் போய் எடுத்தார். உடனே அனத சந்யாசி கோபம் பொங்கி வெடிக்க எழுந்தார். சுடு சொற்களைப் பொழிந்தார். தீட்டுப் பட்டுவிட்டதே என்று தகாத சொற்களை மொழிந்தார். அந்த வேலைக் காரிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஓடி ஒளிந்தார்.

ஆஸ்ரமத்தில் அன்பே வடிவான மாதாஜி கிருஷ்ணாபாயும் வசித்து வந்தார். அவரது காதுக்கும் இந்தச் செய்தி எட்டியது. அந்த சாமியாரின் கோபத்தைக் கண்ட எவரும், அவர் அருகில் நெருங்கப் பயந்தனர். இதற்குள் இன்னொரு சீடர் ஓடிவந்து சூடான தலைப்புச் செய்திகளை வாசித்தார்: "அந்த சாமியார், தான் சமைத்த உணவுகளை இலைகளில் பரிமாறி நாய்களுக்கு வைத்து விட்டார். குட்டிபோட்ட பூனை போல இங்குமங்கும் நடந்து திரிகிறார்".

anger

இதை எல்லாம் அமைதியாகக் கேட்ட மாதாஜி, சமையல் அறைக்குள் சென்று பழத் தட்டை எடுத்தார். அதிலுள்ள முலாம் பழம், மாம்பழம், வாழைப்பழம் முதலிய பழங்களை தோலை எல்லாம் எடுத்துவிட்டு அழகிய வடிவங்களில் வெட்டி ஒரு சுத்தமான தட்டில் வைத்தார். ஒரு தொண்டரை அழைத்து "இதைக் கொஞ்சம் தூக்கிக் கொண்டு வாருங்கள். அந்த சாமியாரின் முன் வையுங்கள்; அச்சம் வேண்டேல்; அடியேனும் உடன் வருவேன்" என்று செப்பினார்.

அந்தத் தொண்டரும் அவ்வாறே செய்ய, அந்த சந்யாசி அதை ஏற இறங்கப் பார்த்துவிட்டு தூரப் பார்வை செலுத்தினார். அங்கே மாதாஜி மெல்ல மெல்ல நடந்து வருவதைக் கண்டார்.

மாதாஜி, அன்பான மெல்லிய குரலில், "அந்த வேலைக்கார பெண், உங்கள் வாளியை அனுமதியின்றித் தொட்டது தவறுதான். தாங்கள் இந்தப் பழங்களை மறுக்காமல் உண்ண வேண்டும்" என்றார். அத்தோடு அவர் கொண்டுவந்த சூடான, சர்க்கரை போட்ட இனிய பசும்பாலை ஒரு 'ஜக்'கு நிறைய கொடுத்து இதையும் அருந்தி பசியாறுக" என்றார். சந்யாசியும் மறுக்காமல் சுவைமிகு பழத் துண்டுகளை ஒவ்வொன்றாகச் சுவைத்தார்; பாலையும் பருகினார். முகத்தில் கோபம் போய் சாந்தம் என்னும் குணம் படரத் துவங்கியது. மாதாஜியும், அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்தார். அவர் சாப்பிட்டு முடித்து விட்டுப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தார்.

மாதாஜியும், மெதுவாக, "எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். "என் கோபமெல்லாம் பறந்து ஓடிவிட்டது. நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று விடை பகர்ந்தார். மாதாஜியும் மெதுவாக தனது அறைக்குப் புறப்பட்டார். அந்த சந்யாசி எல்லோரிடமும் வலியச் சென்று மாதாஜி மிக நல்லவர், மிகப் பெரியவர் என்று புகழ்ந்து தள்ளினார்.

anger cartoon

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் – குறள் 314

ஒருவர் தீங்கு செய்தால், அவரே வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்துவிடுங்கள். இதுவே சிறந்த தண்டனை.

கோபத்தை கோபத்தால் வெல்ல முடியாது; அன்பால்தான் வெல்ல முடியும் – தம்மபதம் 5/ புத்தர் சொன்னது


Thanks | Vanakkam


--
Parent Homepage : www.agathiar.org
---
You received this message because you are subscribed to the Google Groups "omkarakudil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to omkarakudil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to omkarakudil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/omkarakudil.

No comments:

Post a Comment