1 | நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே |
2 | புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான் புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர் உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் தேனே மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே |
3 | பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே |
4 | கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே
|
5 | இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம் எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம் அன்புடையீர் வம்மின் இங்கே சமரசசன் மார்க்கம் அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப் பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின் மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே |
6 | தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச் சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோ தியைஓர் ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர் நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே |
7 | நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றிக் கொடுமொழிசொல் வேனோ சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித் தனித்தபெருஞ் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான் சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச் சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின் உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே |
8 | விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே வருகின்ற தருணம் இது வரம்பெறலாம் நீவீர் கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களில்நீர் பெருகிக் கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே |
9 | களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம் களிப்படைய அருட்ஜோதிக் கடவுள் வரு தருணம் தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் ஒளித்துரைக்கின்றேன் அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன் ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன் அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடையீரே |
10 | ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்ஜோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் ஏசறநீத் தெனை ஆட்கொண் டெண்ணியவா றளித்தான் எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான் தேசுடைய பொதுவில்அருள் திருநடனம் புரியத் திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத் தினும்அழியா மூர்த்தம் அடைந் திடவே |
11 | அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர் அருட்ஜோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம் கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர் யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன் உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே |
12 | திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச் சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர் கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே |
13 | உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர் உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர் எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான் என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர் தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில் சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக் கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும் கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே |
14 | தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச் சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே |
15 | சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய் நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும் நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன் ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச் சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே |
16 | நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை நிலையனைத்தும் காட்டிஅருள் நிலைஅளித்த குருவை எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும் செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர் முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே |
17 | முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும் எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே |
18 | சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர் சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீது என்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ அகமறியீர் அனகமறிந் தழியாத ஞான அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே |
19 | நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்தன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான் வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்கள்எலாம் பெறவே தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே |
20 | குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின் கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின் சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே |
21 | சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத் திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம் ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம்எலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே |
22 | செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே |
23 | பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் புகலுவதென் நாள்தொறுநும் புந்தியிற்கண் டதுவே மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே |
24 | மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள் அல்லால் அதனை எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர் பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம் பலப்பற்றே பற்றுமினோ என்றும்இற வீரே
|
25 | இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர் மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர் சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே பிறந்தபிறப் பிதில்தானே நித்தியமெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே
|
26 | உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர் கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர் கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன் இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடுசேர்ந் திடுமின் என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே
|
27 | சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத் தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்கம் நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப் புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய் அருட்பெருஞ்ஜோ தியை உலகீர் தெருட்கொளச்சார் வீரே
|
28 | சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம் நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே |
No comments:
Post a Comment