இப்படிப்பட்ட நேரத்தில், தன்னை சந்திக்க கவர்னரே வந்துள்ளது கண்டு மிகுந்த மகிழ்சி கொண்ட சரபோசி, கவர்னர் தன்னை சந்திக்க வந்தது குறித்து கேட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து நீங்கள் வருவது குறித்து எனக்கு மதராஸ் ஸ்டேட் கவர்னரிடமிருந்து ஏற்கனவே கடிதம் வந்துள்ளது. மூப்பனார் தேசத்திலிருந்து வந்துள்ள உங்களிடம் தமிழ் நூலான திருக்குறளின் பெருமைகளையும், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பற்றியும், திருக்குறளை போல தமிழில் உள்ள சிறந்த நூல்கள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் தான் நான் உங்களை காண வந்துள்ளேன். தமிழ் புலவர்கள் பற்றியும், தமிழில் உள்ள நூல்கள் பற்றியும் உங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று பல நாட்களாக உங்கள் வரவுக்காக காத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்ட மன்னர் சரபோசிக்கு பெரிய அதிர்ச்சி... ஏனென்றால் மராத்திய வம்சத்தில் வந்த இவருக்கு தமிழும் தெரியாது, திருக்குறளும் தெரியாது. எதோ தஞ்சை மக்களிடம் பேசுவதற்காக தமிழில் உள்ள சில வார்த்தைகள் மட்டுமே மன்னருக்கு தெரியும். மற்றபடி இவருக்கு தெரிந்ததெல்லாம் தாய்மொழியான மராத்தி தான். இதை ஆங்கில கவர்னரிடம் சொல்ல முடியாத மன்னர் உள்ளே சென்று தனது உதவியாளர்களிடம் திருக்குறள் என்றால் என்ன..? என்று கேட்டுள்ளார்.
அங்கிருந்த அலுவலர்கள் திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் தங்களுக்கு தெரிந்த சில தகவல்களை மன்னருக்கு சொல்லியுள்ளனர். சரி சரி இதையெல்லாம் வந்து நீயே கவர்னரிடம் சொல்லு என்று அந்த அலுவலரை கூப்பிட்டிள்ளார் மன்னர் சரபோஜி.
மன்னிக்கவேண்டும் மகாராஜா...! திருக்குறளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டு உங்களை சந்திக்க வந்திருக்கும் இந்த ஆங்கிலேய கவர்னர் சாதாரனமானவராக இருக்க முடியாது. பல நூல்களை கற்றறிந்த அறிஞராக இருப்பார். திருக்குறளைப்பற்றி எனக்குத் தெரிந்ததை விடவும் அவருக்கு அதிகம் தெரிந்திருக்கும். இவரிடம் நாம் வாயை குடுத்து மாட்டிக்கக் கூடாது, அப்படி மாட்டிகொண்டால் அது உங்களுக்கு பெரிய அவமானம் என்று சொல்லிவிட்டார்.
உனக்கு திருக்குறளை பத்தி தெரியுமா..? உனக்கு திருக்குறளை பத்தி தெரியுமா..? என்று தன்னுடன் வந்திருந்த முன்னூறு பேரிடமும் கேட்டுவிட்டார் சரபோஜி. எல்லோரும் ஒரே மாதிரி உதட்டை பிதுக்கி விட்டனர். (23-ம் புலிக்கேசி வடிவேலு) போல சிக்கிக்கொண்ட மன்னர், தன்னுடைய உண்மை நிலையை சொல்லி ஆங்கில கவர்னரிடம் சிக்கிக்கொள்ள விரும்பாமல் ஒரு தந்திரம் செய்துள்ளார்.
மன்னிக்கவேண்டும் கவர்னர் ஜெனரல் அவர்களே...? திருக்குறளைப் பற்றி நான் சொல்லுவதை காட்டிலும், திருக்குறளையும், மற்ற தமிழ் நூல்களையும் நன்கு கற்றறிந்த தமிழ் பண்டிதர்கள் உங்களுக்கு எடுத்துச் சொல்வதுதான் சிறப்பாக இருக்கும். இப்போது, என்னுடன் வந்துள்ள பண்டிதர்களை காட்டிலும், முழுமையாக தமிழ் நூல்களை தரவாக கற்ற பண்டிதர்கள் என்னுடைய அரண்மனையில் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் என்னுடைய நாட்டுக்கு சென்றதும், அவர்களை இங்கே அனுப்பி, உங்களுக்கு திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளில் உள்ள கருத்துகளையும் உங்களுக்கு தெளிவாக சொல்ல ஏற்பாடு செய்வது என்னுடைய பொறுப்பு. நான் அனுப்பும் தமிழ் பண்டிதர் சிலகாலம் உங்களுடைய ஊரில் தங்கியிருந்து திருக்குறளை பற்றியும், தமிழ் நூல்கள் பற்றியும் உங்களுக்கு விரிவாக எடுத்து சொல்வார்கள். அதுதான் சரியாக இருக்கும் என்று ஒரு வழியாக சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.
இதைக்கேட்டு ஏமாற்றம் கொண்ட கவர்னர். திருக்குறளை பற்றி தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், திருக்குறள் நூலை இயற்றிய தமிழ் மண்ணிலிருந்து வந்துள்ள உங்களை சந்தித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியை தருகிறது என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
கவர்னர் சென்ற பிறகு, தனது அலுவலர்களை கூப்பிட்டு என்னய்யா திருக்குறள் ? இருபதாயிரம் மைலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்ச விசியம் எனக்கு தெரியாமப் போய்விட்டதே என்று வருந்தியவர். தஞ்சைக்கு திரும்பியதும் முதல் வேலையாக அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதிமகால் நூலகத்திற்கு சென்று திருக்குறள் பற்றி கேட்டுள்ளார். சோழ மன்னர்கள் ஆட்சிக்காலம் முதல் நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் என எல்லோரின் ஆட்சியிலும் தஞ்சை அரண்மனையில் ஆரியர்களின் "கை" மேலோங்கி இருந்ததால், அவர்கள் தமிழை புறந்தள்ளி சமஸ்கிருதத்தை அரியணையில் ஏற்றி உட்காரவைத்திருந்தனர்.
ஆரியர்களின் மேலாண்மையில் இருந்த சரஸ்வதிமகால் நூலகத்தில் இராமாயானம், மகாபாரதம் போன்ற வடமொழி இதிகாச நூல்களும், சமஸ்கிருதம், தெலுங்கு, மராத்தியில் உள்ள புராண கடவுள் கதைகூறும் நூல்களே அதிகமாக இருந்துள்ளது. அதுபோலவே, கடவுள்களின் கதைகளை சொல்லும் சில தமிழ் நூல்கள் மட்டுமே அப்போது நூலகத்தில் இருந்துள்ளது.
தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்க்கை முறை போன்ற வரலாறுகளை சொல்லும் எந்த ஓலை சுவடிகளும், நூல்களும் சரஸ்வதி மகால் நூலகத்தில் இல்லை. முறையாக தமிழ் பயின்று தமிழ்த்தொண்டு செய்துவரும் பலரும் அருகிலுள்ள சில மடங்களில் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டு அந்த தமிழ் புலவர்களை காணச்சென்றுள்ளார்.
அவர்களை சந்தித்து கேட்டபோதுதான், நாடாளும் மன்னன் முதல் தெருவில் திரியும் பிச்சைக்காரன் வரை நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் எப்படி வாழவேண்டும், எப்படி நடக்கவேண்டும் என்பது குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ள வாழ்விலக்கணம் பற்றி எடுத்துச்சொல்லியுள்ளனர். மன்னர், கடவுள், தலைவர் என்று யாரைப்பற்றியும் புகழ்ந்து தனியாக குறிப்பிடாமல் ஒழுக்கும், வீரம், நேர்மையே மனித வாழ்வின் மேன்மை என்று சொல்லப்பட்ட திருக்குறளின் மீது மன்னர் சரபோஜிக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பபட்டுள்ளது. அதோடு விடாமல், தமிழ் மொழியில் உள்ள சிறந்த பல நூல்களைப்பற்றியும் மன்னர் சரபோஜிக்கு விசாரித்து தெரிந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் மூலகமாக தமிழ் நூல்களின் பெருமைகளை தெரிந்துகொண்ட மன்னர் சரபோஜி தன்னுடைய அலுவலக அதிகாரிகளை கூப்பிட்டு தமிழ் நூல்கள், ஓலைச சுவடிகள் எங்கெங்கு இருக்கிறது என்ற விபரங்களை சேகரிக்க தொடங்கினார். நல்ல தமிழ் சுவடிகளுக்கு விலை கொடுத்தும் வாங்கிக்கொண்டுவந்து சரஸ்வதி மகால் நூலகத்தில் சேர்த்தார். கிராமங்களில் உள்ள சத்திரம், சாவடிகள், கோவில்கள், வறுமையில் வாடும் புலவர்கள் என எல்லோரிடமும் இருந்த ஓலைச்சுவடிகளை விலை கொடுத்து வாங்கியுள்ளார். வங்கியவற்றை கொண்டுவந்து நவீன முறையில் மறு(படி)பதிப்பு செய்துள்ளார்.
தங்களிடம் உள்ள தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து கொடுத்தால் அதற்கு தக்கபடி பரிசளிக்கப்டும் என்று அறிவிப்பு செய்தார். இதைக்கேட்டு நெடுந்தொலைவில் இருந்து ஒருவர் ஒரு ஓலை சுவடியை கொண்டுவந்து மனரிடம் கொடுத்துள்ளார். அபோது, சுவடி கொண்டுவந்தவருக்கு கொடுக்க பணம் இல்லாமல் இருந்ததால் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பட்டத்தை கழட்டி அந்த மனிதனுக்கு கொடுத்துள்ளார்.
இப்படி வந்த பல சுவடிகள் நைந்து கிடந்து கிடந்தது. அப்படிக்கிடந்த பல தமிழ் சுவடிகளை புதுப்பித்தது எழுதவும் முயற்சி மேற்கொண்டார். தமிழுக்கென தனியாக பண்டிதர்களை நியமனம் செய்தார். பிறமொழி நூல்களை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதியதை நிறுத்திவிட்டு தமிழ் நூல்களை வடமொழியில் மொழிபெயர்த்து எழுதி தமிழ் நூல்களின் சிறப்புகளை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார். தனியாக ஒரு அச்சுகூடத்தியும் துவங்கினார். தன்னுடைய ஓய்வு நேரங்களை தமிழ் நூல்கள் சேகரிப்புக்கு ஒதுக்கினார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ப மேல் நாடு அறிஞர்கள் வந்து எங்கே தங்கி தமிழ் கற்க வழிவகை செய்யும் விதமாக இவர் காலத்தில், மேனாட்டு மொழியிலான 5000-அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் நூலகத்திக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன.
மன்னரின் மறைவுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பொறுப்புக்கு வந்ததும், இந்நூலகம் சரபோஜி சரசுவதி மகால் நூல்நிலையம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்நூலகத்திற்கு வெளியே கொலுமண்டபமாக இருந்த ஒரு மண்டபத்தில் சரபோசி மன்னரின் உருவச்சிலையை வைத்த ஆங்கில அரசு 1871-ல், சரபோஜி சரஸ்வதி மகால் நூல் நிலையத்திலுள்ள நூல்களின் பட்டியொன்றை தயாரிக்குமாறு டாக்டர் A.C.பர்னெல் என்னும் நீதிபதிக்குப் பணித்தனர்.
அவர் இந்த நூல் நிலையமே உலக முழுவதிலும் மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமாகும் என்று தனது அறிக்கையில் கூரியதுடன், மொத்தம் 29,000-சுவடிகளும், நூல்களும் உள்ளதாக அவற்றிக்கு பட்டியலிட்டு எண் கொடுத்தது வரிசைப்படுத்தியுள்ளார். அதன்பின் ஜம்புநாதபட் லாண்டகே, காகல்கர், பதங்க அவதூதர் முதலிய வடமொழி அறிஞர்களின் பரம்பரையிலிருந்து ஏராளமான நூற்றொகுதிகள் இந்நூலகத்தில் சேர்க்கப்பட்டன. இப்பொழுது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது.
இந்த நூலகத்தில், ஏறத்தாழ 25,000 சமற்கிருத நூல்கள் உள்ளிட்ட பதினொரு இந்திய மொழி நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுப் புகழ்வாய்ந்த கையெழுத்தாலான பிரிட்டிஷ் அரசியார மற்றும் ஆட்சியாளர்களின் அஞ்சல் மடல்களும், அவற்றுடன் படங்களும், இருக்கின்றன.
400-ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள ஓலைசசுவடிகள் உள்ளன.
300-ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்களும் வைத்து பாதுகாக்கபடுகிறது.
கி.பி.1476-ல், காகிதச் சுவடிகளில் எழுதப்பட்டட சமற்கிருத நூலும், கி.பி. 1703-ல் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி காப்பியமும் பாதுகாப்பாக உள்ளது.
Dr.Johnson' எழுதிய தமிழ்-ஆங்கில அகராதி 1784-பதிப்பு இரு தொகுதிகள். 1749-முதல் 1785-வரை ஜார்ஜ் போபன் எழுதிய பூமியின் இயற்கை வரலாறு என்ற ஆங்கில நூல் 36-தொகுதிகள் பாதுகாக்கபடுக்கிறது.
இலண்டன், பாரில், தேம்ஸ் நதியின் பாலம் உள்ளிட்ட பல ஐரோப்பா நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படமும், வட இந்தியாவில் உள்ள பல நகரங்களின் படங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்களின் ஆய்வுக்கு பயன்படும் மனித உடற்கூறு குறித்த படங்கள், தாவரம், விலங்குகள் முதலிய கலைக்களுக்குரிய பல நிறப்படங்களும் சிறந்த ஓவியங்களும் இங்கு உள்ளன.
மகாராட்டிர அரசர்கள் அலுவலகங்களில் பயன்படுத்திய 'மோடி' எழுத்துக்களாலான கையெழுத்துப் பிரதிகளும், பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட சாமுத்திரிகா என்ற அரியநூல் ஒன்றும் உள்ளது. இது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
இந்திய மருத்துவ முறைக குறித்தும், இயற்கை மருத்துவ முறைகள் குறித்தும் ஏராளமான தகவல்கள் இங்குள்ள நூலகத்தில் படங்களாகவும், எழுத்து வடிவிலும் உள்ளது.
குறிப்பாக சிறுநீர் குடி சோதனை என்ற சோதனை முறையில் நோயாளியின் சிறுநீரை குடித்து என்ன நோய் இவருக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியும் முறையும் இருந்துள்ளது. சமைக்கப்பட்ட உணவின் மீதும், மண் பாத்திரத்திலும் நோயாளியின் சிறுநீரை கொட்டி சோதனை செய்யும் முறையும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது.
33-தொகுதிகளாக கொண்ட பனை ஓலை மூலமாக எழுதப்பட ஒரு சைன மொழி திருக்குறள் உள்ளது.
குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்பதை சார்லஸ் டார்வின் 1859-ல் வெளியிட்டார். ஆனால், அதற்கு முந்தைய காலத்தில் வரையப்பட்ட சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓவியங்களில் குரங்கு, குதிரை, சிங்கம், கரடி, சிறுத்தை, முயல், மான், மாடு, கிளி, கழுகு போன்ற உயிரினங்களில் தோன்றிய மனிதனின் முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதனை காட்டும் வகையில் ஓவியங்களில் வரைந்து வைத்துள்ளனர்.
1805-ல் வெளியிடப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதி, 2400-பாடல்கள் கொண்ட கிராந்தகத்தில் எழுதிய இராமாயணம்.
1476-ம் ஆண்டு வெளியான பாமதி, 1719-ல் பதிப்பிக்கப்பட்ட வாசுதேவரின் இராமாயணம், 1787-எழுதப்பட்ட பஞ்சாங்கம், 1808-இலண்டன் நகரத்து வரைபடம், 1781-ல் வெளியிடப்பட்ட உலக வரைபடம்.(ATLAS) இப்படி பல அறிய கட்சிகளுடன் மன்னர் சரபோஜி 1832-ல் மறந்த போது 47,334 நூல்களை இந்த நூலகத்திற்கு சேர்த்துவிட்டு சென்றுள்ளார்.
இந்திய சுதந்தரத்திற்கு பிறகு தஞ்சை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கொடுத்த ஓலைச சுவடிகள் 7200-மும் புதிதாக சேர்க்கப்பட்டு இப்போது 67,233 புதிய நூல்களுடன் நூல் ஆய்வு மையமும் செயல்பட்டு வருகிறது. இப்போது, வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பலகலைகளில் சிறந்த நூல்கள் உள்ளன.
தமிழ் மொழியின், தமிழகத்தின் வரலாறுகளை எதிர்கால சமுதாயம் அறிந்துகொள்ள வழிவகை செய்யும் இந்த நூலகத்தை அமைக்க மன்னர் சரபோஜிக்கு தூண்டுதலாக இருந்த திருக்குறளும், கவர்னர் ஜெனரலாக இருந்த மெகன்னஸ் பிரபு அவர்களுக்கும் சேர்த்து நன்றி சொல்வோம்.